ரெயில் 
தமிழக செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 100 பவுன் நகை கொள்ளை

கேரளாவில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

நாகர்கோவில்:

கேரளாவில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த ரெயிலில் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஹைதர் அலி என்ற வாலிபர் வந்தார். இவர் திங்கள் நகர் பகுதியில் உள்ள ஒரு நகை கடைக்கு நகைகள் கொண்டு வந்தார்.

நேற்றிரவு நகைகளை பெல்ட்டில் வைத்து அதனை இடுப்பில் கட்டியபடி தூங்கினார். ரெயில் நெய்யாற்றின்கரை பகுதியில் வந்த போது அவர் கண்விழித்து பார்த்தார். அப்போது இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் கழன்று இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பெல்டில் கட்டி வைத்திருந்த நகைகளை பார்த்தார். அதுவும் மாயமாகி இருந்தது. இது பற்றி அவர் நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதில் தன்னிடம் 100 பவுன் நகை இருந்ததாகவும், அதனை யாரோ மர்மநபர் திருடி சென்றுவிட்டதாகவும் கூறினார். நகைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் எனவும் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடம் கேரள மாநில எல்லை என்பதால் இத்திருட்டு குறித்து நெய்யாற்றின்கரை போலீசில் புகார் கொடுக்கும்படி நாகர்கோவில் போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த வாலிபர் நெய்யாற்றின்கரை புறப்பட்டு சென்றார்.