தமிழக செய்திகள்

தமிழ் புத்தாண்டு: திருத்தணி- திருப்போரூர் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- பக்தர்கள் குவிந்தனர்

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பச்சை மாணிக்க மரகதக்கல் தங்கவேல் தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதணை நடந்தது.

இன்று காலை திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, 1,008 பால் குடங்களை, பக்தர்கள் தலையில் சுமந்தவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாகவும், மலைப்படிகள் வழியாக மலைக்கோவில் வளாகத்திற்கு சென்றடைந்தனர்.

பின்னர், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்கா வலர்கள் செய்திருந்தனர்.

மேலும் இன்று முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை என்பதாலும் மற்றும் தமிழ் புத்தாண்டு என்பதாலும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பொதுவழியில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அதிக அளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஆட்டோக்கள், வேன், பஸ் மற்றும் கார்களுக்கு மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் மலைப்பாதையில் பக்தர்கள் படையெடுத்து சென்றனர். இதனால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் 10 சிறப்பு பஸ்கள் மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கும் மலைக்கோவிலில் இருந்து ரெயில் நிலையத்திற்கும் இயக்கப்பட்டது.

திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர். முன்னதாக நேற்று நள்ளிரவு திருப்போரூர் முருகன் கோவிலின் துணைக்கோவிலான மலை மீது அமர்ந்து உள்ள கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நள்ளிரவு 12 மணி அளவில் மலைக்கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு படிக்கும் படி பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று சென்னையில் இருந்து பாதயாத்திரையாக வருகை தந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று பகல் பால்குடம் எடுத்து மாடவீதி வலம் வந்து திருப்போரூர் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை, விசுக்கனி தரிசனம் நடைபெற்றது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கருவறை மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்னர் 9 தட்டுகளில் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துகுடி, அன்னாசி, வாழை, பலா முதலிய பழங்கள், மலர்மாலைகள், கண்ணாடி, உப்பு, அரிசி, பருப்பு வகைகள் மற்றும் மங்கலப் பொருட்கள் வைக்கப்பட்டன. மூலவர் முருகப்பெருமான் முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். பிறகு மூலவருக்குப் பலவித ஆராதனைகள் செய்யப்பட்டு விசுக்கனி தரிசனம் நடைபெற்றது.

வருடப்பிறப்பை முன்னிட்டு திரளான பக்தர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து 5.15 மணிக்கு உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சித்திரைக் கல்யாண உற்சவம் நடைபெற்றது. மற்றொரு உற்சவர் கோடையாண்டவருக்கு பாதாம், முந்திரி, ஏலக்காய் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார்.

காலை 8.30 மணிக்கு மயில் மண்டபத்தில் பராபவ புதுவருட பஞ்சாங்கப் படனம் நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் சந்திரசேகர குருக்கள் பராபவ ஆண்டு பஞ்சாங்கத்தை வாசித்து ஆண்டுப்பலன்களைக் கூறினார்.ஏராளமான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஆதி கேசவ பெருமாளுக்கு 10 நாள் பிரமோற்சவமும், ஸ்ரீராமா னுஜருக்கும் 10நாள் அவதார உற்சவம் நடைபெறும்.

இந்தநிலையில் ஸ்ரீராமானுஜரின் 1009-வது அவதார உற்சவம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இன்று காலை பல்லக்கு, யாழி வாகனத்தில் ராமானு ஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். விழா வின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீராமானுஜர் திருத்தேர் விழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

23-ந்தேதி கந்த பொடி விழா நடைபெறும்.

இந்நிலையில் சித்திரை மாத பிரமோற்சவம் ஸ்ரீஆதி கேசவ பெருமாளுக்கு 10 நாள் உற்சவம் மே மாதம் 1-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. ஆதிகேசவா பெருமாள் தேர் திருவிழா மே மாதம் 7-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

சிறுவாபுரி பாலசுப்பிர மணிய சுவாமி கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், பன்னீர், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.