டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகளுக்கும் 'தமிழக வெற்றிக்கழகம்' தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள தவெக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட செயல் ஜனநாயக அமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும், குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதும் ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும்." என தமிழக வெற்றிக்கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.
அறிக்கையின் மற்றொரு முக்கிய பகுதியாக, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு நடைமுறை குறித்தும் தவெக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே, அத்தேர்வின் மீதான பொதுமக்களின் மற்றும் மாணவர்களின் நம்பகத்தன்மை தொடர்ந்து குறைந்து வருகிறது.தேர்வு தொடர்பான குளறுபடிகளால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலக் கனவுகளும் கேள்விக் குறியாக மாறியுள்ளன.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே, ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் திட்டவட்டமாகக் வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு விவகாரம் மற்றும் டெல்லிப் போராட்டம் தொடர்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் இந்த திடீர் மற்றும் காட்டமான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.