தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் புதிய DNA பரிசோதனை ஆய்வகங்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்!

இதுவரை தமிழ்நாட்டில் உள்ள குற்ற வழக்குகளுக்கான டிஎன்ஏ பரிசோதனைகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள ஒரே மையத்தை மட்டுமே நம்பி இருந்தன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மற்றும் குற்றவியல் விசாரணைகளை விரைந்து முடிக்கும் வகையில், தமிழகத்தில் மேலும் '2 புதிய DNA' பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை வழக்கறிஞர் வழியே தமிழக அரசு அறிக்கை அளித்தது. அதில்,

வழக்குகளின் விரைவு விசாரணை:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளிலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வகங்கள் அதிகரிப்பு:

தற்போது மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தடையவியல் துறை மூலம் DNA பரிசோதனை வசதிகள் உள்ளன. இதனால், ஆய்வக அறிக்கைகள் பெற காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மையங்கள் நிறுவப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை விரைவுபடுத்தவும், தடயவியல் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் பெறவும் பிரத்யேக நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது.

வழக்குகளுக்கு விரைவு தீர்வு:

DNA சோதனைகளின் முடிவுகள் விரைவாகக் கிடைக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைத் தாமதமின்றி வழங்க முடியும். தடய அறிவியல் துறை மற்றும் பிராந்திய ஆய்வகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகளின் முடிவுகள் விரைந்து வெளிவர வாய்ப்பு ஏற்படும்.

இதுவரை தமிழ்நாட்டில் உள்ள குற்ற வழக்குகளுக்கான டிஎன்ஏ பரிசோதனைகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள ஒரே மையத்தை மட்டுமே நம்பி இருந்தன. இந்த புதிய ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது முடிவுகள் மிக விரைவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.