தமிழக செய்திகள்

புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பேரும் புத்தக கொள்முதல் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சிகாலத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஐந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தை சமீபத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

இதையடுத்து நூலகத்தில் இடம்பெற்றிருந்த புத்தகத்தில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஏ.ஐ மூலம் புத்தகம் உருவாக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டை அடுத்து ஒரு விரிவான விசாரணை நடத்த அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டார்.

மேலும் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும், திமுக ஆட்சியின் போதே அதற்கான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் ராஜ்மோகம் கூறினார்.

இந்த நிலையில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, ஐந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐந்து அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக தலைமை நூலகர், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக நூலகர், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மற்றும் தகவல் அலுவலர், பொது நூலக இயக்ககத்தின் தலைமை கணக்கு அலுவலர் ஆகிய ஐந்து பேரை சஸ்பெண்ட் செய்து பொது நூலக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 பேரும் புத்தக கொள்முதலை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் புத்தக கொள்முதல் பேச்சுவார்த்தை குழுவிலும், இந்த 5 பேர் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT