தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் அரிசி விலை கடும் உயர்வு - மூட்டைக்கு ரூ.600 வரை அதிகரிப்பு!

ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஓரிரு மாதங்களாகவே அத்தியாவசியப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தற்போது அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது நடுத்தர குடும்பங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்வுக்கான முக்கியக் காரணங்கள்

தமிழகத்தில் சன்ன ரக அரிசி உற்பத்தி போதுமான அளவில் இல்லை. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் சன்ன ரக நெல்லையே தமிழக அரிசி ஆலைகள் நம்பியுள்ளன.

தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திறந்த வெளிச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் நெல் மூட்டைகளை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் போலீஸ் துணையுடன் எல்லைகளில் இருந்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் தமிழக ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்து, தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது.

தற்போதைய விலை நிலவரம்..

தமிழ்நாட்டில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய விலை நிலவரப்படி (மூட்டை கணக்கில்), ரூ.1,400-க்கு விற்கப்பட்ட டீலக்ஸ் பொன்னி அரிசி தற்போது ரூ.1,800 ஆகவும், ரூ.1,600-க்கு விற்கப்பட்ட பொன்னி அரிசி ரூ.1,950 ஆகவும், ரூ.1,900-க்கு விற்கப்பட்ட வெள்ளை பொன்னி அரிசி ரூ.2,300 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல், ரூ.900-க்கு விற்பனையான இட்லி அரிசி ரூ.1,200 ஆகவும், ரூ.1,500-க்கு விற்கப்பட்ட பச்சரிசி ரூ.1,800 ஆகவும் அதிகரித்துள்ள நிலையில், 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி ரூ.1,800-ல் இருந்து ரூ.2,400 ஆகவும், 30 கிலோ எடை கொண்ட பாஸ்மதி அரிசி ரூ.3,300-ல் இருந்து ரூ.3,600 ஆகவும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

தீபாவளிக்கு முன் கிலோ ரூ.100 ஆகிறதா?

தமிழகத்தில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு மிக வேகமாக சரிந்து வருவதால், வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வெளிமாநில நெல் வரத்தைத் தடுத்து நிறுத்துவதை நிறுத்தி, உடனடியாகக் கொள்முதலை அதிகரித்துச் சேமிக்கவில்லை எனில், தமிழகத்தில் கடுமையான அரிசி பஞ்சம் ஏற்படும் என நெல் வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜென்டுகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT