உச்சநீதிமன்ற ஆணையின்படி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மேற்கொள்ள கூடிய முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக 15 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்று 08.11.2026, தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற ஆணையின் படி மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டைப் போலவே பசுமை பட்டாசுகளை 08.11.2026 காலை 06.00 முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
மேலும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி, மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பொது ஊடகம், வானொலி (FM) மற்றும் துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி 2026 விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை இணைந்து, 03.11.2026 அன்று ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வுப் பயிலரங்கை நடத்தியது. சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிலரங்கில், சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள், காற்றின் தரப் பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறைகள் மற்றும் கழிவுகளிலிருந்து வளம் உருவாக்குதல் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசு அளவையும் கண்டறிய பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தில் உள்ள பிரதான மாவட்டங்களில் காற்று மாசு 39 இடங்களிலும் மற்றும் ஒலி மாசு 34 இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை-7, கோயம்புத்தூர்-2, கடலூர்-2, மதுரை-2, திருநெல்வேலி-2, கன்னியாகுமரி-2, தஞ்சாவூர்-2, திருச்சி-2, வேலூர்-2, சேலம்-2, செங்கல்பட்டு-2, திண்டுகல்-2, கிருஷ்ணகிரி-2, தூத்துக்குடி-2, திருப்பூர்-2, நாகப்பட்டினம்-2 மற்றும் காஞ்சிபுரம்-2 ஆகிய இடங்களில் 01.11.2026 முதல் 09.11.2026 வரை ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தீபாவளி நாளான 08.11.2026 அன்று, காலை 06.00 மணி முதல் மறுநாள் 09.11.2026 காலை 06.00 மணி வரை, காற்றுத்தர அளவு கண்காணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் காற்றுத்தர குறியீட்டு அளவு Air Quality Index (AQI) குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 183 (AQI மிதமான அளவு) ஆகவும், அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 343 (AQI மிக மோசமான அளவு) என ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் உள்ள 39 கண்காணிப்பு மையங்களில் பெறப்பட்ட காற்றுத்தரக் குறியீட்டு (AQI) தரவுகளின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வின்படி, 2026-ம் ஆண்டில் காற்று தரக் குறியீடு அளவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
சராசரி காற்று தரக் குறியீடு அளவானது 2024-ம் ஆண்டில் 143.46 ஆகவும், 2025-ம் ஆண்டில் 161.69 ஆகவும் இருந்து, 2026-ம் ஆண்டில் மேலும் அதிகரித்து 168.97 ஆக பதிவாகியுள்ளது. இது 2025-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026-ம் ஆண்டில் சுமார் 4.50% அதிகரிப்பைக் குறிக்கிறது.
மொத்தம் 39 கண்காணிப்பு மையங்களில், 2026-ம் ஆண்டில் 25 மையங்களில் காற்று தரக் குறியீடு அளவு அதிகரித்தும், 14 மையங்களில் குறைந்தும் பதிவாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து ஒப்பீட்டளவில் அதிக காற்று தரக் குறியீடு அளவுகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, நுங்கம்பாக்கம் (332), வளசரவாக்கம் (343), சௌகார்பேட்டை (311) மற்றும் தி. நகர் (306) ஆகிய பகுதிகளில் 2026-ம் ஆண்டில் காற்றுத் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ (Very Poor) என்ற பிரிவில் பதிவாகியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026-ம் ஆண்டில் திருவொற்றியூர், கடலூர், வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் காற்று தரக் குறியீடு அளவுகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களுக்குமான சுற்றுப்புறக் காற்றுத் தர விவரங்கள் அட்டவணை – 1-ல் இணைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையன்று 08.11.2026 பெருநகர சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில் (மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை) குறைந்த அளவாக ஒலி மாசு 77.4 dB(A) திருவொற்றியூரிலும், அதிகபட்ச அளவாக ஒலி மாசு 88.6 dB(A) வளசரவாக்கத்திலும் கண்டறியப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் ஒலி மாசு ஆய்வறிக்கை அட்டவணை-2ல் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி நாளன்று தமிழ்நாடு முழுவதும் 34 இடங்களில் சுற்றுப்புற ஒலி அளவுகளைக் கண்காணித்தது. தீபாவளிக்கு முந்தைய நாளில் பதிவான ஒலியின் கணிதச் சராசரி அளவானது, 2025-ம் ஆண்டில் 60.29 dB(A) ஆக இருந்து, 2026-ம் ஆண்டில் 61.06 dB(A) ஆக அதிகரித்துள்ளது.
இது 0.77 dB(A) (1.28%) அதிகரிப்பைக் குறிக்கிறது. அதேபோல், தீபாவளி நாளன்று பதிவான ஒலியின் கணிதச் சராசரி அளவானது, 2025ஆம் ஆண்டில் 75.70 dB(A) ஆக இருந்து, 2026ஆம் ஆண்டில் 76.73 dB(A) ஆக அதிகரித்துள்ளது. இது 1.03 dB(A) (1.36%) அதிகரிப்பைக் குறிக்கிறது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கான அனைத்து மாவட்டங்களின் ஒலி அளவு விவரங்கள் அட்டவணை – 2-ல் இணைக்கப்பட்டுள்ளன.
ஒப்பீட்டுப் பகுப்பாய்வின்படி, 2026ஆம் ஆண்டு தீபாவளியின்போது காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் சுற்றுப்புற ஒலி அளவுகள் ஆகிய இரண்டிலும் ஒட்டுமொத்த அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடிப்பதுடன், காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் வளிமண்டல நிலைத்தன்மை போன்ற வானிலை நிலைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளும் இந்த அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். எனவே, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலி மாசின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், தீபாவளிக் கொண்டாட்டங்களின்போது விரும்பத்தக்க காற்றுத் தரம் மற்றும் சுற்றுப்புற ஒலி தரநிலைகளை எட்டுவதற்கும், தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்வது, விதிமுறைகளைத் திறம்படச் செயல்படுத்துவது மற்றும் முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.