தமிழக செய்திகள்

அடிப்படை புரிதலே இல்லை.. 'ரூ.10.5 லட்சம் கோடி கடன்' என்ற மாய பிம்பத்தை உருவாக்கும் அமைச்சர் கீர்த்தனா - தங்கம் தென்னரசு கண்டனம்

பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிற கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10 அன்று விஜய் முதல்வராக பதவியேற்றார்.

சிவகாசியில் வெற்றி பெற்ற கீர்த்தனா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நிகழ்வொன்றில் பேசிய கீர்த்தனா, "பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என முந்தைய திமுக அரசை விமர்சித்தார்.

இந்நிலையில் கீர்த்தனா அடிப்படை புரிதல் இன்றி பேசி வருவதாக திமுகவை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், 'பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க' என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.

அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.

எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் அவர்களும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா?

அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.