நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி, முதல்வருக்கு நன்றி, காங்கிரசுக்கு கண்டனம் மற்றும் தலைவருக்கு அதிகாரம் ஆகிய பொருண்மைகளில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவருக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானத்தில் கூறப்பட்டதாவது, "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும்.
இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம்.
அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும்.
இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.