தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் பணிகளில் த.வெ.க. ஈடுபட்டது. த.வெ.க. சார்பில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.
முதலில் த.வெ.க. ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. தொடர்ந்து சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது. இதில், ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அறிவித்தன. வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று வி.சி.க. தெரிவித்து இருந்தது.
இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்தது. அதனடிப்படையில், கடந்த மே 10-ஆம் தேதி கவர்னர் அர்லேகர் முன்னிலையில், முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். முதலமைச்சர் விஜய்யுடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதன்பின்னர் அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன. எனினும், மீதமுள்ள பல துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியானது. இதில், தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன்படி அக்கட்சி சார்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இவர்கள் இருவரும் அமைச்சர்களாவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்து உள்ளனர்.
இதனால், 1967-ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது. இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒருவர் அமைச்சராக உள்ளார். இதற்கு அக்கட்சியின் தேசிய தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், அதுபற்றி நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது. வி.சி.க. அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு முதலமைச்சர் விஜய் உறுதி செய்துள்ளார். இதனால், அக்கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வன்னியரசு அமைச்சராக பதவியேற்பார் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று தகவல் தெரிவிக்கின்றது.
தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அர்லேகர் கேரளத்தில் இருந்து இன்றிரவு தமிழகத்திற்கு வருகை தருகிறார்.
இதன்படி காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வெ.க. என 18 பேர் நாளை அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதில், 59 ஆண்டுகளுக்கு பின்பு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உறுதியாகி உள்ளது.