தமிழக செய்திகள்

MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!

இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.

2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied & Health Care Courses) பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2026-27ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.

72,633 பேர் விண்ணப்பம்

MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவில் 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

அரசு ஒதுக்கீட்டில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்பு

2026-27ஆம் ஆண்டுக்கான MBBS மற்றும் BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,726 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 12,551 பேர் மாணவர்கள்; 23,375 பேர் மாணவிகள். 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,625 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 981 மாணவர்களும், 2,644 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.

சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,907 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.

MBBS-க்கு 7,157 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

2026-27ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்புக்கு மொத்தம் 7,157 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 4,473 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,684 இடங்களும் உள்ளன.

BDS படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 1,383 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 213 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,170 இடங்களும் உள்ளன.

7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு 641 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள்

7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்பில் மொத்தம் 537 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 202 இடங்களும் உள்ளன. BDS படிப்பில் இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.

நிர்வாக ஒதுக்கீட்டில் MBBS-க்கு 1,966 இடங்கள்

சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,966 MBBS இடங்களும், 580 BDS இடங்களும் உள்ளன.

Allied Health Care படிப்புகளுக்கும் தரவரிசைப் பட்டியல்

மருத்துவம் சார்ந்த Allied & Health Care படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. B.Sc. Nursing, B.Pharm, இணை மருத்துவப் படிப்புகள், Pharm-D, DGNM மற்றும் Diploma in Pharmacy உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 21 முதல் ஜூலை 12, 2026 வரை பெறப்பட்டன.

Allied and Healthcare Degree Courses-க்கு 66,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 65,475 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்புக்கு 12,657 விண்ணப்பங்களில் 12,263 விண்ணப்பங்களும், Pharm-D 3 ஆண்டு படிப்புக்கு 32 விண்ணப்பங்களில் 29 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. DGNM படிப்புக்கு 18,308 விண்ணப்பங்களில் 17,676 விண்ணப்பங்களும், Diploma in Pharmacy படிப்புக்கு 13,018 விண்ணப்பங்களில் 12,718 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் ஆயிரக்கணக்கான இடங்கள்

Allied and Healthcare Degree Courses-ல் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,786 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 3,969 இடங்களும் உள்ளன. B.Sc. Nursing-ல் அரசு ஒதுக்கீட்டில் 400 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 11,807 இடங்களும் உள்ளன. B.Pharm படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 7,234 இடங்களும் உள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்பில் 1,011 இடங்களும், 3 ஆண்டு படிப்பில் 72 இடங்களும் சுயநிதி கல்லூரிகளில் உள்ளன. DGNM படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 2,080 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 5,455 இடங்களும் உள்ளன. Diploma in Pharmacy படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 240 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 6,540 இடங்களும் உள்ளன.

MBBS இடங்கள் அதிகரிப்பு

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கை இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருப்பூர், திருவள்ளூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 150 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 700 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த MBBS இடங்களின் எண்ணிக்கை 9,999 ஆகவும், BDS இடங்களின் எண்ணிக்கை 2,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.

தமிழக அளவில் விழுப்புரம் முதலிடம்

நீட் நுழைவுத்தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார், புதுக்கோட்டை ஸ்ரீனிகா 700 மதிப்பெண்களுடன் 2 ஆம் இடத்தையும், விருதுநகர் சுடர் 696 மதிப்பெண்ணுடன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நாகையை சேர்ந்த தினேஷ் 599 மார்க்குடன் முதலிடம், சேலம் தரணீஷ் 595 மதிப்பெண்ணுடன் 2ஆம் இடம் பிடித்தார்.

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வா. லோகநாயகி மற்றும் தேர்வுக்குழு துணை இயக்குநர்கள் டாக்டர் கராமத், டாக்டர் பாலநாக நந்தினி, டாக்டர் சாந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.