தமிழக செய்திகள்

குறைந்த விலைக்கு நீண்ட கால மின்சாரம் கொள்முதல்- தமிழக அரசு திட்டம்

நீண்ட கால ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.10-க்கு கீழ் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலைக்கு நீண்ட கால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மின்பற்றாக்குறை

தமிழகத்தில் மின்பற்றாக்குறையை சமாளிக்க அரசு வெளிச்சந்தையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது. இதில் அவசர தேவைக்கு குறுகிய கால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் என்பதால் ஒரு யூனிட்டின் விலை அதிகமாக உள்ளது.

சமீபத்தில் ஒரு யூனிட்டின் விலை ரூ.35 வரைக்கும் கொள்முதல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், எதிர்கால தேவை கருதி அடுத்தடுத்து மின்சார கொள்முதலுக்கு வெளியிடப்பட்ட ஒப்பந்தத்திலும், யூனிட்டின் விலை ரூ.37 முதல் ரூ.41 வரை இருந்தபோது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நீண்ட கால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது நீண்ட கால ஒப்பந்தத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய முடியும்.

அதனால் நீண்ட கால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ஆலோசனை வழங்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

தகுதியான ஆலோசகர் நிறுவனம் இதில் விண்ணப்பிக்கும்போது தேர்வு செய்யப்படும். இந்நிறுவனம் குறைந்த விலையில் மின்சாரம் எங்கெங்கு, எத்தனை ஆண்டுகள் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்பதை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைப்பார்கள்.

10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

தமிழக அரசு 2027 முதல் 2037-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட கால ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.10-க்கு கீழ் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு நீண்டகால மின்சார கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீண்ட கால ஒப்பந்தம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT