தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்- சபாநாயகர்

பல ஆண்டுகளுக்குப்பின் அமைதியாக தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்று சபாநாயகர் கூறினார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்துவது என சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை சட்டப்பேரவை கூடும், சனி, ஞாயிறு விடுமுறைக்குப்பின் மீண்டும் திங்கள், செவ்வாய் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 23ம் தேதி வரை நடைபெறும். வழக்கமான நடைமுறைப்படி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடும்.

சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடரில் வினா, விடை நேரம் இருக்காது.

19ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

22, 23 ஆகிய நாட்களில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெறும். இறுதியில் முதல்வர் பதிலுரை அளிப்பார்.

சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை.

பல ஆண்டுகளுக்குப்பின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அமைதியாக தொடங்கி உள்ளது. ஆளுநருக்கு நன்றி.

பேரவை நிகழ்வுகளை எப்படி கையாளுவது என்பது குறித்தும் நேரலை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.