தமிழக செய்திகள்

TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள்.

தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இது தொடர்பாக முதன்மை செயலாளர் சீனுவாசன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரவை உறுப்பினர்களாக பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மேலும், பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நாளை (மே 12) காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் அவரது கட்சியினர் ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.