தமிழக செய்திகள்

TN Assembly Election | தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

இன்று மாலை தி.மு.க. தேர்தல் அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தேர்தல் அறிக்கை ஒவ்வொரு தேர்தலின் போதும் ஹீரோவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தி.மு.க. வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியினை செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரசாரம் என தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க.வும் வேகம் எடுத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 26 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதால் இந்த முறை சற்று தாமதமாகவே நேற்று தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்கள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் என்று கூறியிருந்தார். இதையடுத்து தான் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் இன்று வெளியாகும் என தெரிவித்தார். இதன்படி இன்று மாலை தி.மு.க. தேர்தல் அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்த முறை தி.மு.க. எந்த மாதிரியான வாக்குறுதிகளை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர்,"தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"வெல்லட்டும் திராவிட மாடல்" என வீடியோ வெளியிட்டுள்ளார்.