தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது.
கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை இயல்பாக 16.56 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 21.79 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது 35 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.
இதில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 101 சதவீதமும் (31.34 செ.மீ), திருவள்ளூரில் 79 சதவீதமும் (25.87 செ.மீ.), திண்டுக்கல்லில் 74 சதவீதமும் (32.8 செ.மீ.), காரைக்காலில் 70 சதவீதமும் (43.49 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வழக்கமாக 26 செ.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில் 29.6 செ.மீ. மழை பெய்து உள்ளது. அதாவது சென்னையில் 3 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் தென்காசி, செங்கல்பட்டு, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்கள் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் சென்னையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவில் அதிக அளவில் புழுக்கம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இன்று வெப்பம் உயரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
வங்கக்கடலில் நிலவும் புதிய வானிலை மாறுபாடுகள் மற்றும் காற்றின் திசை மாற்றங்கள் காரணமாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். 93 முதல் 97 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும்.
காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, வெளியில் செல்லும் போது வளிமண்டல வெப்ப நிலை 93 டிகிரியாக இருந்தாலும், உடலுக்கு அது 100 முதல் 102 டிகிரி போல உணரப்படும். பகலில் வானம் ஓரளவு மேகமூட்டம் மற்றும் வறண்ட சூழலுடன் காணப்பட்டாலும், சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான தூறல் அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை (1-ந்தேதி) முதல் சென்னையில் மீண்டும் படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.