தமிழக செய்திகள்

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு, வாங்கிய கடன் எவ்வளவு?- புள்ளி விவரம் வெளியீடு

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ. 30,021 கோடி கடன் வாங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடியாக உள்ளது. இந்த 5 மாத காலகட்டத்தில் அரசின் செலவு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடியாக உயர்ந்துள்ளதால், அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 20,349 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கி வருகிறது. அதோடு வரி வருவாயையும், வரியல்லாத வரி யையும் வசூலிக்கும் நடவடிக்கைகளை நவீனப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசுக்கு மாநில ஜி.எஸ்.டி. வரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், ஆயத்தீர்வை மற்றும் மத்திய அரசின் வரி பங்கு ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் வந்து சேர்கிறது. அதுபோல் சேவை கட்டணங்கள், அபராதம் போன்றவற்றின் வாயிலாக வரி அல்லாத வருவாயும் கிடைத்து வருகிறது.

வருவாய் ஒரு பக்கம் வந்த போதிலும் திட்டப்பணிகள், சம்பளங்கள் வாயிலாக பல்வேறு செலவுகளையும் அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், இலவச திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் போன்றவை அரசுக்கு செலவை ஏற்படுத்துகின்றன. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான கடந்த 5 மாதங்களில் தமிழக அரசுக்கு வந்துள்ள வருவாய் வரவுகள் மற்றும் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

வருவாய் பற்றாக்குறை

அந்த வகையில், வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியம் வாயிலாக வந்த வருவாய் என தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே 5 மாதங்களில் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வருவாய் மற்றும் செலவை கணக்கிட்டால் வருவாயைவிட செலவு கூடுதலாகி ரூ. 20,349 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடன்களுக்கான வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடி

அரசின் செலவுக்கணக்கில், கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடியாகவும், ஓய்வூதியத்தின் பங்கு ரூ. 21,008 கோடியாகவும் உள்ளது. மேலும், கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ. 30,021 கோடி கடன் வாங்கியுள்ளது.

தமிழக அரசுக்கு வந்துள்ள வருவாய் அளவை தனித்தனியாக கணக்கிட்டால் மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ. 34,144.06 கோடி. முத்திரைத்தாள், பதிவு கட்டணம் மூலம் ரூ.10,493.30 கோடி. நிலம் விற்பனை மூலம் ரூ.57.16 கோடி. வர்த்தகம் மீதான வரி மூலம் ரூ. 28,164.79 கோடி. மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ.5,214 கோடி. மத்திய அரசின் வரி பங்கு மூலம் ரூ.24,188 கோடி. இதர வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் ரூ. 6,843 கோடி. வரி அல்லாத வருவாய் மூலம் ரூ.5,149 கோடி. மத்திய அரசின் மானியங்கள் மூலம் ரூ.3,537 கோடியாகும்.

SCROLL FOR NEXT