தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்களை நியமிப்பதற்கான பட்டியலை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியல் கல்லூரிகளில் சுமார் 125-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நிரந்தர முதல்வர்கள் இன்றி பொறுப்பு முதல்வர்கள் மூலமே இயங்கி வந்தன. இதனால் கல்வி நிர்வாகம், மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
பேராசிரியர்களின் பணிமூப்பு சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடைகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவி உயர்வுக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் நிலை கல்லூரிகளுக்கு முதல்வர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்காக 129 இணைப் பேராசிரியர்கள் கொண்ட தகுதிப் பட்டியலுக்கு உயர்கல்வித் துறை ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள் என்று கல்லூரி கல்வி ஆணையரகம் மற்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நியமனங்களின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகச் சிக்கல்கள் தீர்ந்து, கல்வித் தரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.