தமிழக செய்திகள்

’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!

‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றங்கள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் சூழல்களை அறிவியல் பூர்வமாகக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.

‘பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005’-இன் பிரிவு 17(1)-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழுவின் தலைவரும் உறுப்பினர்களும்:

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார். அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றத் துறைத் தலைவர் முனைவர் எஸ். கண்மணி உட்பட துறை சார்ந்த 7 காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிறப்பு உறுப்பினர்:

எளிய முறையில் மக்களிடம் வானிலை தகவல்களைக் கொண்டு சேர்த்து பிரபலமான ‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு வகுத்துள்ள குழுவின் முதன்மைப் பணிகள்:

*தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிலவும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி சூழல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது.

*‘தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை’க்கு அதிநவீன தொழில்நுட்ப முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்குவது.

* பருவமழை பொய்க்கும்போது ஏற்படும் வறட்சியை எதிர்கொள்வதற்கும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் திடீர் பெருமழை-வெள்ளப் பெருக்கைச் சமாளிப்பதற்கும் உரிய நீர் மேலாண்மை ஆலோசனைகளை வழங்குவது.

*இக்குழு '2026-27 மற்றும் 2027-28' ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் தீவிரமாகச் செயல்படும்.

எல் நினோ என்றால் என்ன?

மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்போது 'எல் நினோ' உருவாகிறது. இதன் காரணமாக உலகளவில் வானிலை சீர்குலைந்து, சில இடங்களில் கடும் வறட்சியும், சில இடங்களில் வழக்கத்திற்கு மாறான பெருமழையும் புயலும் ஏற்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் இதன்காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் விவசாயப் பகுதிகளில் நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளதால், அரசு போர்க்கால அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.