சட்டசபையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆர். வீ.ரஞ்சித் குமார் வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகள் வருமாறு:-
வனப்பாதுகாப்பு வன உயிரின மேலாண்மை மனித வனவிலங்கு மோதல் தணித்தல் மற்றும் கள அளவிலான அமலாக்க பணிகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள வனத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 2026 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு வனப் பணி படை ரூ.100.72 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.
தமிழ்நாடு வனத் தீ மேலாண்மை திட்டம் ரூ 60.58 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
வனத்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1947 சீருடை பணியாளர்களுக்கு 12 கோடி ரூபாய் செலவில் அறிமுக பயிற்சி அளிக்கப்படும்.
அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும்.
மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மர தடயவியல் மற்றும் மரப்பொருள் பகுப்பாய்வு மையம் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.
நடமாடும் வன உயிரின தடயவியல் மற்றும் நோயை கண்டறியும் ஆய்வகம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
மனித வனவிலங்கு மோதல் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்.
பிச்சாவரத்தில் படகு சவாரி செய்வதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 சூரிய ஆற்றல் மின்னாற்றலில் இயங்கும் படகுகள் வாங்கப்படும்.
வனத்துறையில் பணிபுரியும் சுமார் 6260 சீருடை பணியாளர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் செலவில் இலவச பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அட்டையாக வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.