தமிழக செய்திகள்

டெல்லிக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - உதயநிதி கண்டனம்

ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.

காவிரி தண்ணீர் திறப்பு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா வழியாக டெல்லிக்குச் சென்றுள்ளனர். இதன்போது மகாராஷ்டிராவின் பாதிவழியில் அம்மாநில காவல்துறை விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்டனரா என்பன குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,

“மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.

ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.

டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.