தமிழக செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!

சாதி, மத மோதல்கள், காவல் மரணங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான விவரங்களை இனி 'RTI' மூலம் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24(4)-இன் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் 'பொது (சட்டம் - ஒழுங்கு)த் துறை'யின் கீழ் உள்ள முக்கியத் தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act, 2005) வரம்பில் இருந்து விலக்கி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, உணர்வுபூர்வமான வழக்குகள் மற்றும் உளவுத்துறை சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பான தகவல்களை இனி பொதுமக்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24(4)-இன் கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநில அரசின் சிறப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

உளவு அமைப்பாக அங்கீகாரம்

தமிழக அரசின் பொதுத் துறையின் கீழ் இயங்கும் 'பொது (சட்டம் - ஒழுங்கு) பிரிவு' என்பது மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பாகச் செயல்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, இனிவரும் நாட்களில் கீழ்க்கண்ட உணர்வுபூர்வமான தலைப்புகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட மாட்டாது:

*மாநிலத்தில் ஏற்படும் சாதி, மதக் கலவரங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள்.

*காவல் துறை விசாரணையின் போது ஏற்படும் மரணங்கள் குறித்த விசாரணை அறிக்கைகள்.

*தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தடுப்புக் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள்.

*மாணவர்கள், விவசாயிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்த விவரங்கள்.

உடனடி அமல்

அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் துறை தொடர்பான கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, உளவு மற்றும் பாதுகாப்புச் சார்ந்த அமைப்புகளுக்கு RTI சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வகைசெய்யும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் எழும் சூழல் உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT