தமிழக செய்திகள்

தமிழகத்தில் யார் ஆட்சி? - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட உள்ளன.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது.

இதற்காக 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்காளர்களில் பெண்கள் அதிக அளவில் ஓட்டுப் போட்டுள்ளனர். 2 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 596 பெண்களும், 2 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 720 ஆண்களும், 4 ஆயிரத்து 517 திருநங்கைகளும் வாக்களித்தனர்.

இதன் மூலம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு சில தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் மிகுந்த ஆர்வத்தோடு ஓட்டுப்போட்டு இருக்கிறார்கள்.

இப்படி சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இளைஞர்கள் எழுச்சியுடன் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். முதல் தலை முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் இந்த முறை தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு செலுத்தி இருக்கிறார்கள்.

இதனால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்கு இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அனைவருமே கணித்துள்ளனர்.

தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் கண்ட நிலையில் விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிட்டன.

முதன்முறையாக தேர்தல் களம் கண்டுள்ள விஜய் இந்த தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. சட்டமன்ற தேர்தலில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர்.

கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பும், பேச்சும் காரசாரமான விவாதமாகவே இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 அறைகள் தயார் நிலையில் உள்ளன.

தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 240 அறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக 3,324 மேஜைகளும் போடப்பட்டுள்ளன.

இப்படி வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணும் பணிக்காக தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 545 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களை தவிர 4,624 நுண் பார்வையாளர்களும் பணியில் உள்ளனர்.