தமிழக செய்திகள்

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை

மின்னணுவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி என இருபெரும் அணிகளுடன், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் இறங்கின. இது தவிர டாக்டர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணி அமைத்தும் போட்டியிட்டனர்.

இருப்பினும் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டது. அதிலும் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளிடையே கடும் போட்டி இருந்ததை காணமுடிந்தது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 23 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். பிரசாரம், ரோடு ஷோ என பரபரப்பான காட்சிகளுடன் இந்த தேர்தல் திருவிழா அமைதியாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதன் முடிவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது தெரியவரும்.

வாக்குப்பதிவு தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதன்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து மின்னணுவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார்.

இதேபோல், திநகர் தொகுதியில் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் உள்ளார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சரவணன் முன்னிலையில் உள்ளார்.

கந்தர்வகோட்டையில் த.வெ.க. வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க. வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலை உள்ளார்.