தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ரூ.130 கோடி முதல் ரூ.150 கோடி வரையிலும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடி வரைக்கும் மது விற்பனை நடக்கிறது.
பண்டிகை காலங்களில் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் திளைப்பார்கள் என்பதால் அப்போது மது விற்பனை படுஜோராக இருக்கும்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளை நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். கடையை திறப்பதற்கு முன்பாகவே குவிந்தனர். மதுப்பிரியர்களின் உற்சாக மிகுதியால் 7-ந்தேதி (சனிக்கிழமை) அன்று ரூ.234 கோடியே 75 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகையன்று (ஞாயிற்றுக்கிழமை) ரூ.206 கோடியே 63 லட்சத்துக்கும் என 2 நாட்களில் சுமார் ரூ.441 கோடியே 38 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
சென்னையில் தீபாவளி பண்டிகை அன்று வடசென்னையில் சில டாஸ்மாக் கடைகளில் இரவு 9 மணிக்கு முன்பாகவே மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம் 5 மண்டலங்களாக இயங்கி வருகிறது. இதில் தீபாவளி மது விற்பனையில் திருச்சி மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் அடங்கிய இந்த மண்டலத்தில் ரூ.98 கோடியே 97 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது.
சென்னை மண்டலத்தில் ரூ.95 கோடியே 85 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.88 கோடியே 38 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.87 கோடியே 52 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.70 கோடியே 66 லட்சம் என மதுபானங்கள் விற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் நேற்றும் களைக்கட்டி இருந்தது. எனவே நேற்று சுமார் ரூ.190 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எனவே தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் (7,8,9) மது விற்பனை ரூ.633 கோடியே 48 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறையுடன் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மதுப்பிரியர்கள் பலர் மதுபாட்டில்களை வாங்கி வெளியே எடுத்து எடுத்து சென்றதால் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 'செஸ்' வரி மூலம் ரூ.38 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.