மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 அன்று மாநில மறுசீரமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு தமிழ்நாடு மாநிலமாக உருவெடுத்துள்ளதை போற்றும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் எல்லைகள் மொழி அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டு, மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டு 1956 நவம்பர் 1 மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதனடிப்படையில் மலையாள மொழி பேசும் பாலக்காடு மற்றும் மலபார் ஆகிய மாவட்டங்கள் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன.
அதேபோன்று கன்னட மொழி பேசும் மங்களூர் உள்ளிட்ட பகுதிகள் கர்நாடகா மாநிலத்திற்கு மாற்றப்பட்டன.
சென்னை மாநகரம் அகஸ்தீஸ்வரம், தோவாலை, கல்குளம் மற்றும் விதிவங்கோடு ஆகிய பகுதிகளை இணைத்துக்கொண்டது. மேலும் செங்கோட்டையை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் உருவானது.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்கு பெற்றுத் தந்த எல்லை போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
"மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.
எல்லை போராட்டத்தில் பங்கெடுத்து சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கி போற்றினோம்.
தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்கு தலைவணங்கி நன்றி செலுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றி பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று.
நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
வீரத்திலும், அறிவிலும், கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்து துறைகளிலும் மேலும் பல உயரங்களை தொட்டு,
உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்” என பதிவிட்டுள்ளார்.