கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
2025-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026ம் ஆண்டு பிப்ரவரி வரை கடன் பெற்றவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செல்லும்.
தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ. 50,000 வரையிலான பயிர்க்கடன்களை மட்டும் தள்ளுபடி செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பிச்சை போட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றச்சாட்டு.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழக அரசு நேற்று விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடனை குறு விவசாயி, சிறு விவசாயி, பெரு விவசாயி எனப் பிரித்து தள்ளுபடி தொகையை அறிவித்துள்ளது.
பட்டவர்த்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், இது விவசாயிகளுக்கு பிச்சை போட்டதாகும். ஊருக்கெல்லாம் சோறு போடும் விவசாயிக்கு கடன் தள்ளுபடி என்ற பெயரில் தமிழக அரசு பிச்சை போட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத்தலைவர் தி. வேல்முருகன் கடும் கண்டனத்தை தெரிவித்து குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளின் ₹50,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
₹50,000க்கும் மேல் ₹1 லட்சம் வரையிலான கடன்களில் ₹5,000 முதல் ₹40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தள்ளுபடியின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள்.
இதனால் அரசுக்கு ₹2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் விவசாயிகளை கேவலப்படுத்தி பிச்சை போட்டுள்ளது.
மூலதனச் செலவு அதிகரிப்பு, இடுபொருள் விலையேற்றம், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், நீர் பற்றாக்குறை, விளைச்சல் குறைவு, போதுமான விலை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பல்வேறு நெருக்கடிகளையும் வாழ்வாதாரச் சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இப்படிப்பட்ட தள்ளுபடி அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (PACS) செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் கரும்பிற்கு சராசரியாக ₹60,000ம், நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ₹36,000ம் பயிர்க்கடனாக வழங்கப்படுகிறது.
இரண்டு ஏக்கர் கரும்பிற்கு பயிர்க்கடன் பெற்றிருந்தால் விவசாயிக்கு கிடைப்பது வெறும் ₹5,000 மட்டுமே. மூன்று ஏக்கர் நெல்லுக்கு பயிர்க்கடன் பெற்றிருந்தால் கிடைப்பதும் வெறும் ₹5,000 மட்டுமே. இதற்குப் பெயர் பயிர்க்கடன் தள்ளுபடி அல்ல பிச்சை.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்த பயிர்க்கடன் தொகை ₹12,000 கோடி. அதற்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ₹7,000 கோடி. ஆனால் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடனின் அளவு ₹2,000 கோடி மட்டுமே.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. விஜய் அவர்கள் விவசாயிகளை காப்பாற்றுவார் என நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு இது நம்பிக்கைத் துரோகமாக அமைந்துள்ளது.
விவசாயிகளுக்கு எவ்வித பயனும் அளிக்காத இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை ரத்து செய்துவிட்டு, தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவோ அல்லது கடந்த கால ஆட்சிகளில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அளவுக்கு ஏற்றவாறோ அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளை பிச்சையிட்டு கேவலப்படுத்த வேண்டாம் என்று கடும் கண்டனத்தை தெரிவித்து குற்றம் சாட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.