தமிழக செய்திகள்

'பொய்க்கால் குதிரை அரசில் தறிகெட்டு ஓடும் காவல்துறை..' கானா பாடகர்கள் கொலைக்கு இபிஎஸ் கண்டனம்

காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தை சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நேற்றுமுன் தினம் இரவு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து அங்கு வந்த ஆறு பேர் கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஹெல்மட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத குற்றவாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் போதையில் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரட்டை கொலை குறித்து விமர்சித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளும் தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.