தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தொடர்ந்து எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அந்த மாவட்ட பெண் கலெக்டருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், அவர் பெண் கலெக்டரின் இல்லத்திற்கு சென்று தொல்லை கொடுத்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வுமான ரவி சங்கர், தனது பகுதி பிரச்சினைகள் குறித்து மனு அளிக்க வந்த ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் த.வெ.க. நிர்வாகிகள் பலரும் பாலியல் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்.
இதையடுத்து முதலமைச்சர் விஜய் சில தினங்களுக்கு முன்பு சென்னை மாமல்லபுரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசிய முதலமைச்சர் விஜய், சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ.க்களை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் யாரும் சிக்கிவிடக்கூடாது. ஊடகங்களில் தேவையின்றி பேட்டி அளிக்கக்கூடாது என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் த.வெ.க. நிர்வாகிகள் தவறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி தலைமை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான
என்.ஆனந்த் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ யாராக இருந்தாலும் சரி, தவறு நடந்தாலோ அல்லது யாராவது தவறு செய்தாலோ கட்சி தலைமைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் சம்பவம் குறித்து பேட்டி கொடுப்பதோ, சமூக வலைதளங்களில் பதிவிடுவதோ, வேண்டுமென்றே ஒரு த.வெ.க. நிர்வாகி மட்டும் நின்று கொண்டு மீதி எதிர்க்கட்சியினரை சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்துவதோ, மறியலில் ஈடுபடுவதோ நிச்சயம் கூடாது.
எந்த தவறாக இருந்தாலும் தலைமைக்கு தெரிவித்தால் கட்சி தலைமை அவர்கள் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
இதையும் மீறி இனி கட்சி விரோத செயல்களில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு குடும்பம். இந்த குடும்பத்திற்குள் நடப்பதை தலைமைக்கு மட்டுமே தெரியப்படுத்த வேண்டும். தலைமை அதற்கு உரிய நடவடிக்கையை கடுமையாக எடுக்கும். கட்சியில் யாருக்கும் பதவி கொடுப்பது, நீக்குவது அனைத்தும் கட்சி தலைவரின் அனுமதி பெற்றால் தான் செல்லுபடியாகும்.
எனவே நான் மீண்டும் சொல்லிக் கொள்வது, கட்சிக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் பேட்டி கொடுத்தாலும், சமூக வலை தளங்களில் பகிர்ந்தாலும், கட்சி விதிகளை மீறி செயல்பட்டாலும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
யார் தவறு செய்தாலும் அது முதலமைச்சர் விஜய்க்கு தான் கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் கட்சிக்கு கெட்ட பெயர் வராத வண்ணம் நேர்மையோடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.