தமிழக செய்திகள்

சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வாங்குவதை தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின் போது, திடக்கழிவுகளில் இருந்து மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

இயந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு:

சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு எவ்வாறு எரிவாயு தயாரிக்கப்படுகிறது, இந்த மையத்தின் தினசரி உற்பத்தித் திறன் எவ்வளவு, மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.

இயந்திரங்களின் இயக்க நிலை மற்றும் தூய்மைப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்த அவர், பணிகளை மேலும் தொய்வின்றி விரைவுபடுத்த அதிகாரிகளுக்குப் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:

சென்னை மாநகராட்சியை முழுமையான தூய்மையான நகரமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள அரசு, வீடுகளிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வாங்குவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை அலட்சியப்படுத்தும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களைக் கவர்ந்த எளிமை:

முன்னதாக, இந்தத் திடீர் ஆய்விற்காக முதலமைச்சர் வாகனப் பேரணியாகப் புறப்பட்ட போது, வழியெங்கும் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது தனது காரில் இருந்தபடியே பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்து, அவர்களின் வாழ்த்துக்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.