தமிழக செய்திகள்

தவெக எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்

கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை வந்தனர்.

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையை தொங்கினார்.

தமிழகத்தில் சமீபகாலமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமாகி ஒரு மாதம் ஆகிறது.

சி.பி.சி. ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் சிறுமியை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.

விமர்சனம்

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

மேலும், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் தமிழக அரசு சிக்கி வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் சர்ச்சை

இந்தநிலையில் துணை சபாநாயகரும் துறையூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கர், அடிப்படை வசதிகள் குறித்து புகார் அளிக்க வந்த வாலிபர் ஒருவரை தாக்கியதாக பரவிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்ட ர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்தது.

இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

ஆலோசனைகூட்டம்

திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் அரசின் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று த.வெ.க. தலைமை கருதுகிறது.

இந்தநிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

முதலமைச்சர் விஜய்

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் சென்னை வந்தனர். இந்நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் அருகேயுள்ள தனியார் விடுதியில் தொடங்கியது.

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்குவதுடன் சில அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT