தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்திற்கு, எவ்வித சட்டபூர்வ அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழ்நாட்டின் காவிரி ஆற்று படுகையில் தொடர்ந்து நீர் கிடைப்பது தொடர்பாகவும், கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளால் நமது விவசாய சமூகத்தினரிடையே அதிகரித்துவரும் அச்சம் குறித்தும்,
மிக முக்கியமான இந்த விவகாரத்தை உடனடியாக மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது நீர்த்தேக்கத்தை கட்ட கர்நாடக அரசு உத்தேசித்துள்ள திட்டம்,
தமிழ்நாட்டுக்கு உரிய நீர்வரத்தை தடுப்பது மட்டுமின்றி, மாண்பமை உச்சநீதிமன்றம் நிர்ணயித்தபடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாக பாதிக்கும்.
கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி, மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) அனுமதி பெற, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சக / ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அலுவலர்களுடன், கர்நாடக முதலமைச்சரின் சந்திப்பு நடப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது தமிழ்நாட்டு விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது; முன்னதாக, கர்நாடக அரசு கூறியதாக வெளியான செய்தி அறிக்கைகளின்படி, ஒன்றிய அரசின் அதிகாரிகள் குழு ஒன்று மேகதாது அணை கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டதாகத் தெரியவருகிறது.
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை மறைமுகமாகச் செயல்படுத்துவதன் அறிகுறியாகவே தமிழ்நாட்டின் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
மேலும், நீர் பற்றாக்குறை ஆண்டுகளில் விகிதாச்சார அடிப்படையில் கூட தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய நீரினை கர்நாடகா வழங்க மறுப்பதால்,
இந்த பற்றாக்குறை நீர் ஆண்டில் (2026–27) ஏற்கனவே தவித்து வரும் காவிரி டெல்டா விவசாயிகளின் கவலையை, ஒன்றிய அரசு அதிகாரிகள் அணைகட்ட உத்தேசித்துள்ள இடத்தைப் பார்வையிட்டதாக வந்த செய்தி மேலும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, 28.07.2026-ஆம் நாளிட்ட தனது கடிதத்தை பிரதமர் அவர்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டுவருவதுடன், அதில், காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்கி உள்ளதாகத் தெளிவாக நிரூபிக்கப்படாமல், மேகதாது திட்டத்திற்கு எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக ஒப்புதலும் வழங்கப்படக் கூடாது என்று தாம் கோரியிருந்தேன்.
மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்சினையில் தீர்வு எட்டப்படும் வரை, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மேகதாது திட்டத்திற்கு, எந்தவொரு அனுமதியையும் வழங்கத் தடை விதிக்கக் கோரி, 27.05.2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில், தமிழ்நாடு அசல் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 19.06.2026 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் கர்நாடக அரசுக்கோ அல்லது அதன் நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளுக்கோ எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பிப்ரவரி 2007-இல் நடுவர் மன்றத்தால், காவிரிப் படுகை, நீர் பற்றாக்குறை உள்ள படுகை எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால், காவிரிப் படுகைக்கு மட்டுமே பொருந்தும் வகையில் நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு திட்ட முன்மொழிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பாக டிசம்பர் 2025-இல் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு அறிக்கையைத் திரும்பப்பெறக்கோரி, மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் 03.08.2026 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு (W.P. (Civil) No. 1045 of 2026), நிலுவையில் உள்ளது.
கீழ்ப்படுகை மாநிலங்களின் மொத்த பங்கு மற்றும் மாதாந்திர அட்டவணைப்படி நீர் வழங்கப்படுதலை உறுதிசெய்தல் ஆகிய இரு உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படுவது அவசியமானது என்பதால், கர்நாடகா சமர்ப்பித்துள்ள மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிப்பதோ / ஆய்வு செய்வதோ அல்லது இத்தருணத்தில் ஒன்றிய அரசின் முகமைகளின் ஒருதலைப்பட்சமான தொழில்நுட்ப மதிப்பீடுகள் அல்லது நேரடி தள ஆய்வுகள் முற்றிலும் பொருத்தமற்றது.
மேற்கூறியவற்றின் அடிப்படையில், பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட்டு கீழ்க்காணும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அக்கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-
i. மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பை கருத்திற்கொண்டு, கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது திட்டத்திற்கு எவ்வித நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ அல்லது சட்டப்பூர்வ / நிர்வாக அனுமதிகள் வழங்குவதையோ தவிர்க்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் & ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ii. ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தால் சமீபத்தில் நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் தொடர் நிருவாக அல்லது தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும்.
iii. சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் இத்திட்டத்தை தொடரவேண்டாம் என கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும்.