தமிழக செய்திகள்

கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசுத் தரப்பில் முக்கிய உறுதிமொழி

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, அரசுத் தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களை வாங்க உறவினர்கள் சம்மதம்

அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, மைசூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களின் சடலங்களையும் பெற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தினரும், கிராம மக்களும் இறுதியாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.