முதல்வர் விஜய்  
தமிழக செய்திகள்

தமிழ் என்றால் கெத்து, பவர்.. தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானத்தில் முதல்வர் விஜய் பேச்சு

1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார்.

இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

முதலாவதாக இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் உரையாற்றினார்.

விஜய் உரை

அவர் பேசியதாவது,

மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும். ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நமது உயிர். நமது உணர்வு.

நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம் நேசம் எல்லாமும் நமக்குள் உணர்வாக தோன்றுவதுபோல தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படியோ அதுபோல தான் தாய் மொழியும்.

நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற சமூகம் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும். விடாது. விடவும் மாட்டோம். நமது தமிழ்த்தாய் வாழ்த்தை 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார்.

இந்திய துணை கண்டதை இந்திய ஒன்றியதை அழகிய முகமாக கூறிய சுந்தரனார் அந்த முகத்தோட நெத்தியில் வைக்கிற திலகம் தான் தமிழ்நாடு என்றார். இந்தியாவோட நெற்றியில் இருக்குற பொட்டு மாதிரி ஒரு வெற்றி பொட்டு தான் தமிழ்நாடு. அதன் நறுமணம் உலகம் முழுவதும் பரவுவதுபோல தமிழோட புகழும் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்றார்.

தமிழ் என்றால் கெத்து, பவர்

இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது?. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு பண்பாடு. அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர்.

அந்த தமிழோட புகழை கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்தி பிடிக்கிறதே எந்த மொழி, மதம், இனத்தையும், எந்த தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. கொஞ்சமும் காயப்படுத்தவில்லை.

நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி பெயர் இருக்கும். கூட்டத்தில் நம் பெயரை சொல்லி கூப்பிட்டால் நாம் மட்டுமே திரும்பிப் பாப்போம். ஆனால் தமிழ் என்றால் ஒட்டுமொத்தமாக நாம் எல்லாருமே திரும்பிப்பார்ப்போம் . அப்படி நமக்கு இருக்கும் பொதுப் பெயர் அது.

நமக்கு தமிழ் என அடையாளம் கொடுத்ததே தமிழ் தான். ஒரே பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது நம் தமிழ்தான். அப்படி உயர்த்திப்பிடிக்கும் தமிழை பின்னே தள்ளினால் தமிழ்நாடு எப்படி பொறுக்கும். ஒரு கட்சிக்கு பிரச்சனை என்றால் அந்த கட்சி மட்டுமே போராடும்.

ஆனால் தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்து நிற்கும். அதனால் தான் தமிழ் என்றால் உயிர், உணர்வு. உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்தன. ஆனால் தமிழ் நீடித்து நிற்கும் ஒன்று.

தமிழில் என்ன இல்லை?, இலக்கியம் இலக்கணம் என பல்லாயிர வருடமாக இருப்பது நம் தாய் மொழிக்கு தான். தொல்காப்பியம், சங்க இலக்கியம், உலகம் முழுவதும் தெறிந்த திருக்குறள் ஒன்று போதும் தமிழின் பெருமையை சொல்வதற்கு. இப்படிப்பட்ட தமிழுக்கான அடையாளம் தான் தமிழ்த்தாய் வாழ்த்து.

ஒட்டுமோத்த இந்தியாவுடைய பன்முகத்தன்மையை உயர்த்தி பேசும் நம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு மாநில மொழி, பண்பாடு, பாரம்பரியத்திற்கு பாதுகாப்பு உரிமையை கொடுத்திருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடம் கொடுத்து தான் ஆக வேண்டும். அதுதான் மாநில உரிமை.

அப்படிப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தான் 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என அரசாணை போடபட்டு செயல்பாட்டுக்கு வந்தது. பின்னர் 2021 டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது நிறுவன நிகழ்வுகளில் தமிழ்த்தாய் பாட வேண்டும் என அரசாணை உள்ளது.

2026 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ஒன்றிய அரசின் கடிதத்தில் அரசு விழாக்களில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் மாநில பாடல் குறித்து எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்தது. நம் அரசு பொறுப்பேற்றும் கடந்த மே 27 ஆம் தேதி பிரதமருக்கு, மாநில பாடல்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் அறிக்கையில் திருத்தம் வேண்டும் என்றும் மாநில விழாக்களில் மாநில பாடல்களை முதலில் பாடுவதற்கான அங்கீகாரம் வேண்டும் என கடிதம் எழுதியிருந்தோம்.

அதைத்தொடர்ந்து ஜூலை 9 அன்று கடிதத்தில் மாநில பாடல் பாடப்படுவதுபற்றி இருந்தது. ஆனால் நம் தமிழ்நாட்டில் 1970களில் இருந்து எல்லா அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபாக இருக்கிறது. அதற்கான அரசாணையும் இருக்கிறது. தமிழ் நம் அடையாளம். பண்பாடு. எனவே அதை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு சமரசம் செய்யாது.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல. மாறாக இந்தியாவின் உயர்ந்த கொள்கையான ஒற்றுமையை வெளிப்படுத்துவது. இது அரசியல் தொடர்பான விவதாக மாற அவசியமில்லை.

இது தமிழரின் பொது அடையாளம். நம்மை வேறுபடுத்துவது அல்ல, ஒன்றிணைப்பது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் உயரிய பணியில் இந்த பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, அனைத்து பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்தார்