தமிழக செய்திகள்

எழுத்துப் பிழைகளுடன் வெளியிடப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை விளக்க வீடியோ..!

சிங்கப் பெண் அதிரடிப்படை விளக்க வீடியோவில் எழுத்துப் பிழைகளுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய், இன்று மாலை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஏ.ஐ. மூலம் ஒரு விளக்க வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஏராளமான எழுத்துப் பிழைகள் காணப்பட்டன. இவற்றை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றன.

இது தொடர்பாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் எக்்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏ.ஐ. காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.

பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது. தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏ.ஐ. காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?

பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.