தமிழக செய்திகள்

41 புறநகர் ரெயில்கள் ரத்து-தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்!

மதியம் 3:30 மணிக்கு மேல் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் மின்சார ரெயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் தடையின்றி இயங்கும்.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான ரெயில் பாதையில் இன்று அவசர கால தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மின்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை' ஐந்து மணி நேரத்திற்கு இயக்கப்பட வேண்டிய 41 புறநகர் மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதே போன்ற பராமரிப்புப் பணி அடுத்த ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 12ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

10 மணிக்கு முன்பாகவே குவிந்த பயணிகள்:

ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தங்களின் அவசரப் பயணங்களை 10:30 மணிக்கு முன்பாகவே முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான பயணிகள் காலை 10 மணிக்கு முன்பாகவே தாம்பரம் ரெயில் நிலையத்தில் திரண்டனர்.

ஒரே நேரத்தில் வழக்கத்திற்கு மாறாகப் பெருந்திரளான மக்கள் கூடியதால், டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் நடைமேடைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் தாம்பரம் ரெயில் நிலையம் கடுமையான நெரிசலுடன் பரபரப்பாகக் காணப்பட்டது.

பயணிகளின் வசதிக்காகத் தெற்கு ரெயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் சில முக்கிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:

பயணிகளின் சிரமத்தைக் குறைக்க தாம்பரம்-செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருமால்பூர் ஆகிய பகுதிகளுக்கு இடையே குறிப்பிட்ட கால இடைவெளியில் தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்:

ரெயில் சேவை இல்லாததால் ஏற்படும் பாதிப்பைச் சரிசெய்ய, சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

மதியம் 3:30 மணிக்கு மேல் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் மின்சார ரெயில் சேவைகள் மீண்டும் வழக்கம்போல் தடையின்றி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.