தமிழக செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார்களிடம் அதிரடி சோதனை- பரபரப்பு

இன்று காலை கிரிவலப்பாதையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் கிரிவலப்பாதை பரபரப்பாக காணப்பட்டது.

ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் பகல், இரவு என எப்போதும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படும். நாள் ஒன்றுக்கு சுமார் 20 முதல் 40 ஆயிரம் பேர் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் கிரிவலப்பாதையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தபடுகிறதா என துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், லட்சுமி ஆகியோர் அடங்கிய போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கிரிவலப்பாதையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சாதுக்கள், சாமியார்கள், கிரிவல நடைபாதையில் தங்கி உள்ளவர்கள் ஆகியோரிடம் சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இன்று காலை கிரிவலப்பாதையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் கிரிவலப்பாதை பரபரப்பாக காணப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கல் நகர், சமுத்திரம் காலனி, பாவாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1.5 கிலோ கஞ்சா பிடிபட்டது.

கஞ்சாவை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று கிரிவலப்பாதை முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். கஞ்சா மற்றும் குட்கா தொடர்பான அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.