தமிழக செய்திகள்

கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித் தாயார் கைது - திருமாவளவன் பாராட்டு

சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெல்லை மாவட்டத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் முயற்சியால் 10 மாதங்களுக்கு பின்னர் கொலையாளி சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார்!

தமிழ்நாடு அரசின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின் (வயது 27), இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கொலை செய்த சுர்ஜித், அவரின் தந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

அடுத்தகட்டமாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. போலீசார் துரித மாக விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் உறவினர் ஜெயபால் என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து இந்த ஆணவக்கொலை வழக்கு குறித்து குற்றப்பத்திரிகை தயார் செய்து நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.

அங்கு வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த வழக்கில் 3-வது நபராக சேர்க்கப்பட்ட சுர்ஜித்தின் தாயாரும், சப்-இன்ஸ்பெக்டருமான கிருஷ்ணகுமாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

கடந்த முறை நடந்த கோர்ட்டு விசாரணையின்போது, தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பெண் சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்வதில் என்ன பிரச்சனை? உடனே அவரை கைது செய்ய வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.

இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

நீண்ட தேடுதலுக்கு பிறகு நேற்று முன்தினம் கிருஷ்ணகுமாரியை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.