சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. மின்சார ரெயிலை தென்னக ரெயில்வே கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ரெயிலில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.105 கட்டணம், எழும்பூர் வரை ரூ.35, சைதாப்பேட்டை வரை ரூ.40, பரங்கிமலை வரை ரூ.60, தாம்பரம் வரை ரூ.85, கூடுவாஞ்சேரி வரை ரூ.90, செங்கல்பட்டு வரை ரூ.105. இந்த கட்டண விகிதங்கள் சாதாரண மின்சார ரெயில்களை விட பல மடங்கு அதிகம்.
சாதாரண மின்சார ரெயில்களில் கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ரூ.10 தான் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்தது.
அதற்கு ஏற்றார்போல் பயணிகளிடம் வரவேற்பும் கிடைக்கவில்லை. விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் தினமும் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஆட்களே இல்லாமல் காலியாகவே சென்று வந்தன. இந்த நிலையில் தற்போது நிலவி வரும் கடுமையான கோடை காரணமாக பயணிகள் பணத்தை பார்க்காமல் ஏ.சி. வசதிக்காக இந்த ரெயிலை பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள். அலுவலக நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான கூட்டம் அலைமோதுகிறது. அலுவலகங்களில் பணிபுரிந்தவர்கள் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடிகிறது. ஏ.சி.யில் சொகுசாக செல்ல முடிகிறது. மேலும் ஜி.பி.எஸ் வசதியும் இருக்கிறது.
கட்டணத்தை பார்த்தால் சொகுசாக பயணம் செய்ய முடியாது. அதே நேரம் இந்த கட்டணம் மெட்ரொ ரெயிலை விட அதிகமாக உள்ளது. எனவே கொஞ்சம் கட்டணத்தை குறைக்கலாம் என்றனர்.