தமிழக செய்திகள்

சுரண்டை அருகே கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் பெண் எரித்து கொலை

கொலை வழக்கில் துப்பு துலக்க ஆலங்குளம் டி.எஸ்.பி. தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்டிமாரியின் கணவர் முருகன், கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள சுந்தர் என்பவருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஸ்டாலின், ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ், சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தடயவியல் துறையினர் மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை

இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்க ஆலங்குளம் டி.எஸ்.பி. தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடையம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சுரண்டை இன்ஸ்பெக்டர் மதன் ராம்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர், இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்கள் மற்றும் சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், எரித்துக் கொலை செய்யப்பட்டவர் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த குட்டிமாரி என்பது தெரியவந்தது.

குட்டிமாரியின் கணவர் முருகன், கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகியோர் பழைய துணிமணி வியாபாரம் செய்து வந்துள்ளனர். வியாபாரத்திற்காக சுரண்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்து வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. குட்டிமாரி கடையநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுரண்டை

இந்நிலையில், குட்டிமாரிக்கும் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஒருவருக்கும் நீண்டகாலமாக தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் முருகன், அதனை கைவிடுமாறு மனைவியிடம் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து முருகனின் தம்பி ரவிக்கும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கடையநல்லூரில் பெட்ரோல் பங்க் வேலையை முடித்துவிட்டு குட்டிமாரி சுரண்டையில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ரவிக்கும் குட்டிமாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ரவி துணியால் குட்டிமாரியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

சிறிது நேரத்தில் தங்கும் விடுதிக்கு வந்த முருகன் மற்றும் அவரது தாய் சிவகாமியிடம், குட்டிமாரியை கொலை செய்துவிட்டதாக ரவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கொலையை மறைக்கும் நோக்கில், இரவு நேரத்தில் குட்டிமாரியின் உடலை எடுத்து சென்று சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையோர வாழைத்தோட்டத்தில் வைத்து தீயிட்டுக் கொளுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்டிமாரியின் கணவர் முருகன், கொழுந்தன் ரவி, மாமியார் சிவகாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT