தமிழகத்தில் பள்ளி கோடைவிடுமுறை முடிந்து ஜூன் 4-ந் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால் விடுமுறையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திரும்பி சென்னை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். நேற்று மாலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி அதிகப்படியான வாகனங்கள் செல்லத் தொடங்கின.
இதனால் வாகனங்கள் சாலையில் அதிகரிக்க ஆரம்பித்ததால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல சென்னை மார்க்கமாக பொதுவாக 6 வழிகள், திருச்சி மார்க்கமாக 6 வழிகள் என இருக்கும். இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் சென்னையை நோக்கி சென்றதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக 3 வழிகள் திறந்து 9 வழிகளில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதிகளில் சாலை மிகக்குறுகியதாக இருந்ததால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் விரைந்து செல்ல முடியாமல் 3 கிலோமீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து பாம்பு போல ஊர்ந்து சென்றன.
இதில் நேற்று முன்தினம் (30-ந்தேதி) நள்ளிரவு 12 மணி வரை 50,125 வாகனங்கள் சென்னை நோக்கி சென்றன. மேலும் நேற்று நள்ளிரவு 1 மணியிலிருந்து இன்று நள்ளிரவு 12 மணி வரை 52,025 வாகனங்கள் என மொத்தம் 1,02,150 வாகனங்கள் சென்னை தலைநகருக்கு சென்றன.
வாகன போக்குவரத்து சரி செய்வதற்காக விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், ஹரிகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி அண்ணா சாலை மேம்பாலம் கட்டும் பணி மற்றும் பாப்பனப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்தை சரி செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதோபோல் திண்டிவனம் வழியாகவும் கோடை விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் தங்களது வாகனங்களில் படையெடுத்து உள்ளனர்.
இதனால் திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து பாதிப்பானது சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் யாரும் இல்லாததால் போக்குவரத்து சம்பித்துள்ளது.
இந்த பகுதியில் ஓட்டல்கள் அதிகளவில் உள்ளதாலும், வாகனங்களை சரியான முறையில் நிறுத்ததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்தால் மட்டுமே போக்குவரத்தை சரி செய்ய முடியும் என சமூக ஆர்வலரும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.