தமிழக செய்திகள்

கோடை சீசன் - ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பூங்காக்கள் புனரமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகி வருகின்றன.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடைக்காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காக ஏப்ரல்-மே மாதங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவர்.

அப்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தாண்டும் கோடைசீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பூங்காக்கள் புனரமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகி வருகின்றன.

இதில் ஒரு பகுதியாக ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக கடந்த ஜனவரி மாதம் கவாத்து செய்யப்பட்டு இருந்த ரோஜா செடிகள் தற்போது செழித்து வளர்ந்து, பல வண்ணங்களில் மலர்ந்து காட்சியளிக்கின்றன.

மேலும் பூங்காவின் சரிவுப்பகுதிகளில் பல்வேறு மலர் நாற்றுகளை பயன்படுத்தி தோட்ட ஊழியர்கள் கலைநயம் மிகுந்த வடிவங்களில் அலங்கார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கோடைசீசனுக்காக வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஊட்டி ரோஜா பூங்கா கண்கவர் மலர் விழாவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.