தமிழக செய்திகள்

வரும் நாட்களில் உக்கிரத்தில் இருக்கும் வெயில்..!- மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன?

தவிர்க்க இயலாமல் வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் வெளிர் நிற குடைகளை பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற 4-ந்தேதி 'அக்னி நட்சத்திரம்' என்ற கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

குறிப்பாக அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

வெயிலை எதிர்கொள்வது குறித்து அரசு டாக்டர்கள் கூறிய ஆலோசனைகள் வருமாறு:-

வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளில் வெளிர் நிற ஆடைகளை உடுத்துவதுடன், உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிய கூடாது. வெயில் நேரத்தில் வெளியே சென்றால் குடை எடுத்து செல்வதுடன், வெயிலில் வேலை பார்க்கும் நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும். வெயில் பட வாய்ப்புள்ள முகம், கை, கழுத்து ஆகிய இடங்களில் 'சன் ஸ்க்ரீன் லோசன்' தடவிக் கொள்ளலாம். முடிந்த வரை வெயில் படாமல் பார்த்துக்கொள்வதுடன், நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டரும், பெண்கள் 3 லிட்டரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதேபோல், பெண்கள் 'ஜீன்ஸ், லெக்கின்ஸ்' உள்ளிட்ட உடலை இறுக்கும் ஆடைகள் அணிவதை தவிர்ப்பதுடன். ஏ.சி. அறையில் இருப்பவர்கள் நீர் பருகாவிட்டால் உடல் சோர்வு ஏற்படும். நீச்சல் குளங்களுக்கு செல்லும்போதும் தண்ணீர் பருக வேண்டும். குளிர்பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும் என்பதாலும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட குளிர் பானங்களையும் தவிர்க்கலாம். மாறாக பொட்டாசியம் நிறைந்த பானமாகிய இளநீரை அதிகம் பருக வேண்டும்.

இவை தவிர, வெயிலில் நின்றுதான் ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ள உடலுழைப்பு தொழிலாளர்களாகிய சாலைப்பணியாளர்கள், வயலில் வேலை செய்வோர், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் தினமும் 5 லிட்டரை விட எவ்வளவு முடியுமோ கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

தவிர்க்க இயலாமல் வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் வெளிர் நிற குடைகளை பயன்படுத்தலாம். குழந்தைகளை மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு கழுவி விட வேண்டும். பெரியவர்களுக்கு நீர் ஆதாரங்களை அதிகளவில் தர வேண்டும். நீர் சத்து உள்ள பழங்கள், இளநீர், நுங்கு சாப்பிடுவது நல்லதாகும்.

தொடர்ந்து 4 நாட்கள் மிக அதிகமான வெயிலில் இருக்க நேர்ந்தால் 'ஹீட் ஸ்ரோக்' என்று அழைக்கப்படும் வெப்பத்தாக்கத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே சுத்தமான தண்ணீரை தவிர்க்காமல் குடித்து வருவதே இந்த வெயிலில் இருந்து எளிமையாக பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும்.

இவ்வாறு அரசு டாக்டர்கள் கூறுகின்றனர்.