கோவை சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே மாதம் 21-ந் தேதி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.
இதுதொடர்பாக சூலூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாள்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி கொலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்தி (வயது 33), அவரது நண்பர் மோகன் (31) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கடையில் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி, சிறுமியை கார்த்தி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும், இதற்கு அவரது நண்பரான மோகன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 21 நாளில் 819 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும், கொலை குற்றம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு அதுதொடர்பான பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி கட்ட வக்கீல்கள் வாதமும் நடந்து வந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஹரிகரன் முன்னிலையில் நடைபெற்றது. குற்றச்சாட்டு விவரங்களை எழுத்து மூலமாக 250 பக்கத்துக்கு அரசு தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார்.
எதிர்தரப்பு வக்கீலும் எழுத்து மூலமாக மனு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கில் இன்று (16-ந் தேதி) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தார்.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான கார்த்தி, மதுரை ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆனால் திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மோகன் அழைத்து வரப்படாமல் இருந்தார். இந்தநிலையில் வழக்கின் தீர்ப்பை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதையொட்டி கோவை நீதிமன்ற வளாகத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கார்த்தியின் உறவினர்கள் சிலரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.