தமிழக செய்திகள்

சூலூர் சிறுமி வழக்கு: கார்த்தி, மோகன்ராஜ் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

தண்டனை விபரங்கள் டிச.4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

கோவை சூலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (நவ.27) தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனை விவரங்கள் டிச.4ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர், கடந்த மே மாதம் 21ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்போது மாயமானார்.

இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமி அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

சிறுமியை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார்த்தி மற்றும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன் ஆகியோரை போலீஸார் மே 23ஆம் தேதி கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 21 நாட்களுக்குள் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. சுமார் 6 மாதங்கள் நடைபெற்ற விசாரணையில், அரசுத் தரப்பில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் மற்றும் 221 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் சிசிடிவி காட்சிகள், மருத்துவம் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களும், சாட்சிகளின் வாக்குமூலங்களும் அடங்கும்.

இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கின் தீர்ப்பை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து போக்சோ நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விபரம் டிச.4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT