தமிழக செய்திகள்

கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் : அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்

மறு உத்தரவு வரும் வரை பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாது என அறிவித்துள்ளது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் இன்று மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் இன்று காலை அத்திப்பள்ளி சாலையில் மறியல் நடைபெற்றது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.

தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்

இன்று அதிகாலை முதல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா செல்லும் அனைத்து பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பஸ்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் செல்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் அறிவுறுத்தலின்படி, தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், "மறு உத்தரவு வரும் வரை பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாது" என அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓசூர் - அத்திப்பள்ளி பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்

அதே சமயம், ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் 16 மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றின் சேவையில் மாற்றம் செய்யவும் போக்குவரத்து துறை தயாராக உள்ளது.

தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால், பெரும்பாலான பயணிகள் அவற்றின் மூலம் பெங்களூரு நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.

எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த மறியல் போராட்டத்தையொட்டி ஜூஜூவாடி, அத்திப்பள்ளி உள்ளிட்ட தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எல்லையில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT