சென்னை–கொல்கத்தா நெடுஞ்சாலையில் புழல் அருகே ஏற்பட்ட ராட்சத பள்ளம் காரணமாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
புழல் அருகே மாதவரம் நோக்கி செல்லும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சுமார் 15 அடி அகலத்திற்கும் 25 அடி ஆழத்திற்கும் இந்த பள்ளம் காணப்பட்டது. தரையில் புதைக்கப்பட்டு உள்ள ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
எப்போதும் பரபரப்பாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் கடும்போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளம் ஏற்பட்ட போது அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாததால் அசம்பா விதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது.
இந்த திடீர் பள்ளம் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்குச் செல்கின்ற மாணவ - மாணவிகள் மற்றும் அலுவலகங்கள் சென்றவர்கள் வாகன நெரிசலில் சிக்கி சிரமம் அடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் செங்குன்றம் செல்லும் சாலையில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.