சென்னை தலைமை செயலகம் பகுதியில் இன்று பகல் 12 மணி அளவில் திடீரென புகை மூட்டம் காணப்பட்டது. சிறிது நேரத்தில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதன் காரணமாக அந்த பகுதி வழியாக சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
மெரினா காமராஜர் சாலை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் தலைமை செயலகத்திற்குள்ளேயும் புகை மூட்டம் பரவியது. இதன் காரணமாக தலைமை செயலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அங்கு வந்திருந்தவர்கள் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளானார்கள். பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தனர். கண் எரிச்சலாலும் அவதிப்பட்டனர்.
தலைமை செயலகம் எதிரில் உள்ள துறைமுகம் பகுதியில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதும் அதன் காரணமாகவே இந்த பாதிப்புகள் திடீரென உருவானதும் கண்டுபிடிக்கப்பட்டது. துறைமுக வளாகத்தில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்த வேதிபொருள் ஒன்று அதிக வெப்பம் காரணமாக ஆவியாக வெளியேறியதாகவும், அதன் காரணமாகவே தலைமை செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகள் புகை மூட்டமாக மாறியதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தலைமை செயலக பகுதிக்கு விரைந்து வந்தன.
துறைமுகத்துக்குள்ளும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று புகை மூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டன. வேதிபொருள் மீது தண்ணீர் ஊற்றி வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்த வாயுக்கசிவு காரணமாக தலைமை செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் முகத்தை துணி மற்றும் கைக்குட்டையால் மூடிய படியே அங்கிருந்து விரைந்து சென்றனர். கண் எரிச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு அங்கிருந்து செல்ல முடியாத நிலைக்கு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும் போது, ‘திடீரென ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
முதியவர் ஒருவர் கூறும்போது, ‘வயதான காலத்தில் என்னை போன்றவர்கள் இந்த வாயுக்கசிவால் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். உடனடியாக அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
பெண் ஒருவர் கூறும் போது, ‘என்னால் நடந்து செல்லவே முடியவில்லை. அந்த அளவுக்கு கண் எரிச்சலும், தொண்டை கரகரப்பும் உள்ளது என்று கூறினார். வாயுக்கசிவு காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் பாதிப்பை சந்தித்தார்கள்.
12 மணி அளவில் ஏற்பட்ட இந்த வாயுக்கசிவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதை தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வாயுக்கசிவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வாயுக்கசிவு ஏற்பட்டபோது முதலமைச்சர் விஜய் கோட்டையில் தனது அறையில் இருந்து பணிகளை மேற்கொண்டு இருந்தார். மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கோட்டையிலேயே இருந்தனர்.
முதலமைச்சர் விஜய்யிடமும் வாயுக்கசிவு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக வாயுக்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யவும், வாயுக்கசிவை முழுமையாக கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சுற்றுச்சூழல் அதிகாரிகளும் வாயுக்கசிவை சரி செய்வ தற்கான நடவடிக்கைகளில் வேகம் காட்டினார்கள்.
இந்த வாயுக்கசிவு காரணமாக தலைமை செயலக பகுதி மட்டுமின்றி பாரிமுனை, மெரினா கடற்கரை உள்ளிட்ட துறைமுகத்தை ஒட்டி உள்ள பகுதி மக்களும் இருமல், குமட்டல், கண் எரிச்சல் போன்றவற்றால் பாதிப்பை சந்தித்தனர்.
சென்னையில் திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு மற்றும் புகை மூட்டம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.