தமிழக செய்திகள்

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகே செல்லும் தோனியாற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கோவில் நடை சாத்தப்பட்டு பாதுகாப்பாக பக்தர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் இன்று காலை வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, ஏராளமானோர் நீராடி வந்தனர்.

இந்நிலையில், திருமூர்த்தி மலையின் மேல்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆன ஜல்லி முத்தான்பாறை, குருமலை, மேல்குருமலை ஆகிய பகுதிகளில் திடீரெனக் கடுமையான கனமழை பெய்தது. இதன் காரணமாக, பஞ்சலிங்க அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அருவியில் வெள்ளம் பெருகி வந்ததை அடுத்து, அங்கு பணியில் இருந்தவர்கள் மேல்மலையில் கனமழை பெய்தால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதை அறிந்த பணியாளர்கள் கொடுத்த எச்சரிக்கையின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் நல்வாய்ப்பாகப் பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

அதேபோல் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகே செல்லும் தோனியாற்றல் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கோவில் நடை சாத்தப்பட்டு பாதுகாப்பாக பக்தர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் திருக்கோவில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.