தமிழக செய்திகள்

ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடும் வகையில் தரம் உயர்த்தவே ஊக்கத்தொகை உயர்வு– அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.

சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-

நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.

5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?

200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.

பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.

சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய். பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர்.

இலவச ரேஷன் அரிசி

திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?

இலவசமாக தரும் அரிசி, சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. ரேஷன் அரிசி வீட்டில் சாப்பிடும் அளவுக்கு தரம் உயர்த்தப்படுவதற்காக தான் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தினார் முதலமைச்சர் விஜய்.

திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.

கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.

விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.